கிணத்துக்கடவில் புதர் மண்டி காணப்படும் ரெயில் நிலைய சாலை


கிணத்துக்கடவில் புதர் மண்டி காணப்படும் ரெயில் நிலைய சாலை
x
தினத்தந்தி 26 July 2021 10:38 PM IST (Updated: 26 July 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் ரெயில்நிலைய சாலை புதர்மண்டி காணப்படுகிறது. எனவே அங்குள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் ரெயில்நிலைய சாலை புதர்மண்டி காணப்படுகிறது. எனவே அங்குள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

ரெயில் நிலையம் 

கிணத்துக்கடவில் ரெயில் நிலையம் உள்ளது. இங்குள்ள பஸ்நிலை யத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள ரெயில் நிலையத்துக்கு ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து லட்சுமி நகர் வழியாக செல்ல வேண்டும். 

கொரோனா ஊரடங்கு காரணமாக  இந்த வழியாக தற்போது ரெயில் இயக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை அகல ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 

புதர்மண்டி கிடக்கும் சாலை 

இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் யாரும் செல்லாததால் அங்கு செல்லும் சாலையை முட்புதர்கள் ஆக்கிரமித்து விட்டன. சில இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு புதர் மண்டி காணப்படுகிறது.

எனவே இந்த சாலையில் உள்ள முட்புதர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இதுகுறித்து மேலும் பயணிகள் கூறியதாவது:- 

அகற்ற வேண்டும் 

பஸ்களில் செல்வதைவிட ரெயிலில் செல்ல  பயணக் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம் என்பதால் ரெயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். 

கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதாலும், இந்த ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாலும் விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது. 

இதனால் இந்த ரெயில் நிலையத்துக்கு பயணிகள் வருகை அதிகரிக்கும். ஆனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலை புதர்மண்டி கிடப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட இடம் கூட இல்லை. 

எனவே உடனடியாக அந்த முட்புதர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story