பூதலூரில் மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் சிறைபிடிப்பு டிரைவர்கள் கைது


பூதலூரில் மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் சிறைபிடிப்பு டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 26 July 2021 5:30 PM GMT (Updated: 26 July 2021 5:30 PM GMT)

பூதலூரில் மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்ட அரசு மணல் குவாரி மூலம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் விற்பனை செய்துவந்தனர். தற்போது மணல் குவாரி மூடப்பட்டதால் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டரிடம் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு மனு கொடுத்தும் அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை 3 லாரிகளில் மணல் ஏற்றி வந்ததை கண்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் பூதலூர் தாலுகா அலுவலகம் உள்ள சாலையில் மணல் லாரிகளை மறித்து சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறைபிடித்த 3 லாரிகளை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடு்த்து தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், ஜனநாயக மாதர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் போராட்டம் நடத்திய மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூதலூர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அப்போது மணல் ஏற்றி லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 லாரிகள் மீது தாசில்தார் புகார் தருவதாக கூறியதையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர்.

இதுகுறித்து தொண்டராயன்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுதா பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர்கள் வல்லம் ராமலிங்கம் (வயது38), ராஜ்குமார் (34), பூதராயநல்லூர் சிவக்குமார் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story