திருவண்ணாமலையில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு


திருவண்ணாமலையில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 26 July 2021 11:03 PM IST (Updated: 26 July 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

உடற்தகுதி தேர்வு 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2-ம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பதவிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதில் திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், வெள்ளத்துரை, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர். இத்தேர்வுக்கு திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 646 பேர் தகுதி பெற்று இருந்தனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளொன்றுக்கு 500 பேர் வீதம் தேர்வு செய்யும் பணி நடந்தது. தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்க வரும்போது 4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து அதற்கான மருத்துவச் சான்றிதழ் எடுத்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா பரிசோதனை சான்றிதழ்

அதன்படி நேற்று காலை போலீசார் தேர்வாளர்களிடம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் சோதனை செய்த பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக உடற்தகுதி தேர்வுக்கு இளைஞர்கள் பலர் ஆர்வமாக அதிகாலையில் இருந்தே தேர்வு நடக்கும் மைதானத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் ஆயுதப்படை மைதானத்துக்கு வெளியில் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து குறிப்பிட்ட நபர்களாக பிரித்து, பிரித்து மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. 

பின்னர் உயரம் மற்றும் மார்பளவு அளத்தல், 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது. இவர்களை தேர்வு செய்யும் பணியில் 300 போலீசார் மற்றும் 100 அமைச்சு பணியாளர்கள் ஈடுபட்டனர். 30 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேர்வு நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறும் 2-ம் கட்ட தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story