2-ம் நிலை போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு
விருதுநகரில் 2-ம் நிலை போலீசார் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
விருதுநகர்,
விருதுநகரில் 2-ம் நிலை போலீசார் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2-ம் நிலை போலீசாருக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த எழுத்துத்தேர்வில் மாவட்டத்தில் 2,678 ஆண்களும், 828 பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆக மொத்தம் 3,096 பேருக்கான உடல் தகுதி தேர்வு இந்நகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.தினசரி 500 பேருக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி 2 நாட்கள் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடத்தப்படும்.
கண்காணிப்பு
உடற்தகுதி தேர்வில் உயரம், எடை, மார்பளவு ஆகியவை சரி பார்க்கப்படுவதுடன் 1,500 மீட்டர் தூரம் ஓடும் திறனும் கணக்கிடப்படும்.
உடற்தகுதி தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 3096 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வருகிற 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது உடற்தகுதி தேர்வு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நான் இதற்கான கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். மேலும் துணைதேர்வுக்குழு அதிகாரியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பணியாற்றுகிறார்.
உடல் வெப்பநிலை
தகுதி தேர்வு நேர்மையான முறையில் எவ்வித தவறுக்கும் இடமளிக்காமல் பாரபட்சமின்றி நடத்தப்படுகிறது. தினசரி உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்டு 6-ந் தேதி வரை இதர உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். அதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற தகுதித்தேர்வுகள் நடத்தப்படும். கடைசி 2 நாட்கள் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும். தகுதித் தேர்வுக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனைக்கு பின்பு அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு டி.ஐ.ஜி. காமினி கூறினார்.
நேற்று 2-ம் நிலை போலீசார் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்ட 500 பேரில் 328 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story