விபத்தில் பலியான 3 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்


விபத்தில் பலியான 3 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 26 July 2021 6:57 PM GMT (Updated: 26 July 2021 6:57 PM GMT)

நெல்லை அருகே விபத்தில் பலியான 3 பேர் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது.

நெல்லை:
நெல்லை அருகே விபத்தில் பலியான 3 பேர் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது. 

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்

நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியை கடந்து பெட்ரோல் பங்க் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளும்- மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 

இறந்தவர்கள் விவரம் மற்றும் விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் 

தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 61). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் நெல்லை கங்கைகொண்டானில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்ணன் வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கங்கைகொண்டானில், நாரைக்கிணறு அருகே உள்ள கீழக்கோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி காசிமணி (30), அவருடைய மனைவி ஜெயலட்சுமி (24), மகன் கேசவன் (5) ஆகியோர் ஊருக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தனர்.

3 பேர் பலி

அவர்களை பார்த்த கர்ணன், 3 பேரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில், கங்கைகொண்டான் அருகே இரும்பு கம்பி தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த புளியங்குடியை சேர்ந்த முத்துக்குமார் (27), சாத்தூரை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகிய 2 பேரும் வந்து கொண்டிருந்தனர். 

அப்போது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது. இதில் கர்ணன், முத்துக்குமார், காசிமணி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தும், தீயில் கருகியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

3 பேருக்கு சிகிச்சை

ஜெயலட்சுமி, கேசவன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story