கறி விருந்தில் மோதல்; தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு


கறி விருந்தில் மோதல்; தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 27 July 2021 12:51 AM IST (Updated: 27 July 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே கறி விருந்தில் ஏற்பட்ட மோதலில் தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே கறி விருந்தில் ஏற்பட்ட மோதலில் தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 

கோவிலில் கறி விருந்து

சங்கரன்கோவில் அருகே உள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் சேது மகன் மாரிச்சாமி (வயது 32). இவருடைய உறவினரின் மகனுக்கு அங்குள்ள கோவிலில் முடிகாணிக்கை செலுத்தி, காதுகுத்தும் நிகழ்ச்சி நடத்தினர். இதில் மாரிச்சாமி தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு கறி விருந்து நடந்தபோது, மாரிச்சாமியின் சகோதரரான ஞானகுரு தன்னுடைய மகனின் இலையில் கறி வைக்குமாறு பந்தி பரிமாறிய பவுன்ராஜிடம் கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு

சிறிதுநேரத்தில் சாப்பிட்டு விட்டு கைகழுவும் இடத்துக்கு ஞானகுரு சென்றபோது, அங்கு அவரிடம் பவுன்ராஜ், அவருடைய உறவினரான ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த செந்தட்டிவேல், பவுன்ராஜ் மனைவி மகாலட்சுமி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஞானகுருவுக்கு ஆதரவாக அவருடைய சகோதரர் மாரிச்சாமி பேசினார்.

இதில் ஆத்திரமடைந்த செந்தட்டிவேல் அரிவாளால் மாரிச்சாமியை வெட்டினார். இதை தடுக்க முயன்ற மாரிச்சாமியின் தாயார் சுசீலாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் அவர்களை கம்பால் தாக்கி, அடித்து உதைத்தனர்.

வழக்கு

இதில் படுகாயமடைந்த மாரிச்சாமி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், சுசீலா சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஞானகுருவை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story