தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி- பரபரப்பு


தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி- பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2021 7:50 PM GMT (Updated: 26 July 2021 7:50 PM GMT)

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.

நாகர்கோவில், 
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.
பலத்த சோதனை
கொரோனா ஊரடங்கின்போது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில வாரங்களாக திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளிக்க வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளிக்க வந்தவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் நிறுத்தப்பட்டு, மனு கொடுக்க வருபவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மாற்றுத்திறனாளி வாலிபர்
அதேபோல் நேற்றும் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் நின்று மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி வாலிபர் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அவர் திடீரென கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், கலெக்டர் அலுவலக ஊழியர்களும் பார்த்து, அந்த வாலிபரை பிடித்து அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் இதுகுறித்து நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்து, தற்கொலை செய்ய முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.
பரபரப்பு
இதில் அந்த வாலிபர் ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் வணிகர் தெருவை சேர்ந்த கசமுத்து பாண்டியன் என்பது தெரிய வந்தது. மருந்தாளுனரான அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் இவருடைய தாத்தாவுக்குரிய சொத்தை உறவினர்கள் ஏமாற்றி பறித்ததும் தெரிய வந்தது. 
அவர் வைத்திருந்த மனுவில் தனது தாத்தாவுக்குரிய சொத்தை மாற்றுத்திறனாளியான தனக்கு ஒரு சதுர அடி கூட தராமல் உறவினர்கள் ஏமாற்றி விட்டனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். நான் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.
எனவே தயவுகூர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இல்லாத பட்சத்தில் உயிரை மாய்க்கவும் தயங்கமாட்டேன் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த மனுவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடச் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கூறியும் அறிவுறுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story