கணினி மையங்களில் காத்திருந்து ஆர்வமுடன் விண்ணப்பித்த மாணவர்கள்


கணினி மையங்களில் காத்திருந்து ஆர்வமுடன் விண்ணப்பித்த மாணவர்கள்
x
தினத்தந்தி 26 July 2021 8:14 PM GMT (Updated: 26 July 2021 8:14 PM GMT)

கல்லூரிகளில் சேர கணினி மையங்களில் மாணவ, மாணவிகள் காத்திருந்து, ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

தாமரைக்குளம்:

மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நேற்று முதல் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. மேலும் நடப்பாண்டில் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப, விண்ணப்பப்பதிவும் நேற்று முதல் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் உள்ள பெரும்பாலான கணினி மையங்களில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்து, விண்ணப்ப பதிவுக்காக காத்திருந்தனர். அவர்கள் அதற்கான சான்றிதழ்களையும் கொண்டு வந்திருந்தனர்.
ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்
ஒவ்வொரு கணினி மையத்திலும் குறைந்தபட்சம் 50 முதல் 100 மாணவ, மாணவிகள் காத்திருந்து ஆர்வமுடன் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதில் ஒரு கல்லூரிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.48-ம், பதிவு கட்டணமாக ரூ.2-ம் சேர்த்து மொத்தம் ரூ.50-ஐ ஏ.டி.எம். கார்டு மூலம் செலுத்தினர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினர். அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பித்தனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட பகுதியிலும் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 10-ந் தேதியும், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 24-ந் தேதியும் கடைசி நாள் ஆகும்.

Next Story