ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்துவது தள்ளிப்போகும் - இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்


ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்துவது தள்ளிப்போகும் - இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 2:44 AM IST (Updated: 27 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தள்ளிப்போகும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

பெங்களூரு:
  
ஆளில்லா விண்கலம்

  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி விண்வெளிக்கு முதல் முறையாக வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோட்டமாக 2 ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

  அதில் ஒரு விண்கலம் வருகிற டிசம்பர் மாதம் செலுத்தப்படும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆளில்லா விண்கலம் திட்டமிட்டப்படி செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காலதாமதம்

  ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த திட்டத்தின் முன்னோட்டமாக முதல் ஆளில்லா விண்கலத்தை வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த ஆளில்லா விண்கலத்தை திட்டமிட்டப்படி வருகிற டிசம்பர் விண்ணில் செலுத்துவது என்பது சாத்தியமில்லை. இது தாதமதமாகும். இது விண்ணில் செலுத்துவது அடுத்த ஆண்டிற்கு (2022) தள்ளிப்போகும்.

  விண்காலத்தில் செல்லும் வீரர்களுக்கு ரஷியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வி பயிற்சி, விமான பயிற்சி, கடற்படை பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் விண்கலத்தில் செல்லும் வரை இந்த பயிற்சி அடிக்கடி அவர்களுக்கு வழங்கப்படும். விண்கலத்தின் என்ஜின் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் தகுதி குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
  இவ்வாறு கே.சிவன் கூறினார்.

Next Story