எடியூரப்பா கடந்து வந்த பாதை...!


எடியூரப்பா கடந்து வந்த பாதை...!
x
தினத்தந்தி 26 July 2021 9:24 PM GMT (Updated: 26 July 2021 9:24 PM GMT)

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது அரசியல் வாழ்க்கையில் கடந்த வந்த பாதையை இங்கே விரிவாக காண்போம்....

பெங்களூரு:

சட்டசபை தேர்தலில் போட்டி

  கர்நாடக முதல்-மந்திரியாக 4 முறை பதவி வகித்தவர் எடியூரப்பா. அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 78 வயது ஆகிறது. சொந்த ஊரில் பி.யூ.சி. வரை படித்த பிறகு வேலை தேடி சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு சென்றார். அங்கு ஒரு அரிசி மில்லில் கிளார்க்காக பணியாற்றினார்.

  இந்துத்துவா கொள்கை மீது ஈர்ப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனசங்கத்தில் சேர்ந்தார். அந்த அமைப்பில் தாலுகா, மாவட்ட தலைவராக பணியாற்றிய அவர், 1975-ம் ஆண்டு சிகாரிபுரா புரசபை தலைவராகவும் இருந்தார்.

  அதன் பிறகு 1983-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளார். ஆனால் 1999-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதற்கு முன்பு 1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை சட்டசை எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார். அதனால் 2000-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடக மேல்-சபை உறுப்பினராக பணியாற்றினார். தற்போது அவர் சிகாரிபுரா தொகுதியில் 7-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு முதல்-மந்திரி ஆனார். பின்னர் 1988-ம் ஆண்டு கர்நாடக பா.ஜனதா தலைவராக பணியாற்றினார்.

7 நாட்களில் ராஜினாமா

  கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போது குமாரசாமி முதல்-மந்திரியாக பணியாற்றினார். கூட்டணியில் ஆளுக்கு 20 மாதங்கள் ஆட்சி என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 20 மாதங்களுக்கு பிறகு குமாரசாமி ஆட்சியை எடியூரப்பாவுக்கு விட்டுக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து எடியூரப்பா கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி முதல் முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஜனதா தளம் (எஸ்) பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் அதை ஏற்க விரும்பாத எடியூரப்பா 7 நாட்களில் அதாவது அதே மாதம் 19-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

  அதைத்தொடர்ந்து கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2008-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்த எடியூரப்பா, ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் தனக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் துரோகம் செய்துவிட்டதாக கூறி பிரசாரம் செய்தார். இதனால் அந்த தேர்தலில் பா.ஜனதா 110 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சுயேச்சைகளின் ஆதரவுடன் எடியூரப்பா 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார்.

புதிய கட்சி தொடங்கினார்

  3½ ஆண்டுகள் பதவியில் நீடித்த அவர், சட்டவிரோத கனிமவளத்துறையில் எழுந்த ஊழல் புகார் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அந்த ஊழல் புகாரில் சிறைக்கும் சென்றார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி ஆகும். அதன் பிறகும் அவர் கை காட்டிய சதானந்தகவுடா, ஜெகதீஷ்ஷெட்டருக்கு தான் பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கியது. 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

  2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவின் கட்சி தனித்து போட்டியிட்டு சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றது. எடியூரப்பா உள்பட 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால் எடியூரப்பா தனி கட்சி தொடங்கியதால், பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு மீண்டும் எடியூரப்பா தாய் கட்சியில் சேர்ந்தார். பிறகு 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பா போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்று பணியாற்றினார்.

ஆபரேஷன் தாமரை

  பா.ஜனதாவுக்கு திரும்பிய பிறகு எடியூரப்பாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு பா.ஜனதா மேலிடம் மீண்டும் மாநில தலைவர் பதவியை வழங்கியது. அவரது தலைமையில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜனதா எதிர்கொண்டது. இதில் 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெரும்பான்மை பலம் கிடைக்காததால், எடியூரப்பா 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆயினும் அவருக்கு கவர்னராக இருந்த வஜூபாய்வாலா அவசரம் அவசரமாக முதல்-மந்திரியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால் எடியூரப்பா மூன்றே நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தால், 14 மாதங்களுக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்தனர். இதையடுத்து எடியூரப்பா மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த நிலையில் அவர், கட்சி மேலிடத்தின் கட்டளையை ஏற்று நேற்று பதவி விலகினார்.

மக்கள் செல்வாக்கு

  கர்நாடக பா.ஜனதாவில் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவராக வலம் வரும் எடியூரப்பா பதவி விலகி இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொடர்ந்து கட்சி பணி ஆற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எடியூரப்பா பதவி விலகி இருப்பது காங்கிரசுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. 

அதனால் எடியூரப்பா பதவி விலகினாலும், அவரை கட்சி பணியில் ஈடுபடுத்த பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 பெண் குழந்தைகளுக்கான பாக்கிய லட்சுமி திட்டம்

எடியூரப்பா ஆட்சி காலத்தில் பாக்கிய லட்சுமி திட்டம் என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தினார். பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.1 லட்சத்திற்கு பாண்டு வழங்கப்பட்டது. அந்த குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்த தொகையை பெற்றோர் பெற முடியும். 

முதலில் ரூ.1 லட்சத்திற்கு அறிவித்த எடியூரப்பா 2-வது முயைாக முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தினார். இந்த திட்டத்திற்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. இது பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

அக்னி பரீட்சைகள்

எடியூரப்பா 2-வது முறையாக முதல்-மந்திரியாக இருந்தபோது உட்கட்சி எம்.எல்.ஏ.க்களால் பல்வேறு அக்னி பரீட்சைகளை எதிர்கொண்டார். அவரை நிம்மதியாக ஆட்சி செய்ய விடவில்லை. உட்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்குவதும், அவர்களுக்கு கும்பலாக ரெசார்ட்டுக்கு சென்று தங்கி இருந்தபடி எடியூரப்பாவை மிரட்டுவதுமாக இருந்தனர். எடியூரப்பா அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி பா.ஜனதாவை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய கவர்னர் பரத்வாஜிடம் கடிதம் வழங்கினார். 

கவர்னர் உத்தரவுப்படி எடியூரப்பா பெரும்பான்மை பலத்தை காட்ட சட்டசபையை கூட்டினார். அப்போது அந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் சட்டசபையில் வரலாறு காணாத ரகளை ஏற்பட்டது.

எடியூரப்பாவை முடக்கிய கொரோனா

முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற அடுத்த சில நாட்களில் வட கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. பெரும் பாதிப்புகள் உண்டானது. ஒரு மாதம் மந்திரிகள் நியமிக்கப்படவில்லை. தனி ஆளாக செயல்பட்டு அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். அந்த சவால் முடிந்த அடுத்த ஓரிரு மாதத்தில் கொரோனா பரவல் தொடங்கியது. 

இதனால் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்தது. இதனால் அவர் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவதிலேயே அவரது ஆட்சி காலம் கழிந்தது. அவர் 2 முறை கொரோனா பாதிப்புக்கும் ஆளானார். அவர் மன உறுதியுடன் இருந்து அதில் இருந்து மீண்டு வந்தார். மொத்தத்தில் அவரை செயல்பட விடாமல் கொரானா முடக்கியது என்றே சொல்லலாம்.


தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார்

பெங்களூருவில் அல்சூரி ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலைக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அந்த சிலை திறக்கப்படாமல் துணி போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில் எடியூரப்பாவின் உறுதியான நடவடிக்கையால் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. 

இந்த விழாவில் எடியூரப்பா மற்றும் அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிவமொக்காவில் உள்ள தமிழ் சங்கத்திற்கு எடியூரப்பா அதிகளவில் நிதி உதவியும் வழங்கியுள்ளார். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எடியூரப்பா ஒரு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார். அவர் பதவி விலகி இருப்பது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஒரு முறை கூட ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை

எடியூரப்பா 4 முறை கர்நாடக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். அதில் முறை 7 நாட்களும், 3-வது முறை 3 நாட்களும் பதவியில் இருந்தார். 2-வது முறையாக அவர் முதல்-மந்திரி பதவியில் 3½ ஆண்டுகளும், 4-வது முறையாக 2 ஆண்டுகளும் பதவியில் இருந்துள்ளார். 

ஆனால் ஒரு முறை கூட அவர் 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. இந்த ஒரு அதிர்ஷ்டம் அவருக்கு கிடைக்கவில்லை. இது அவரது அரசியல் வரலாற்றில் ஒரு குறையாகவே இருக்கும்.

Next Story