பிரபல நடிகை ஜெயந்தி திடீர் மரணம்
பத்மபூஷன் விருது பெற்ற பிரபல நடிகை ஜெயந்தி திடீரென மரணம் அடைந்தார். அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. அவரது மறைவுக்கு எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு:
நடிகை ஜெயந்தி மரணம்
கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்தவர் ஜெயந்தி. பிரபல நடிகையான ஜெயந்தி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி, மராத்தி ஆகிய 6 மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது பெங்களூரு பனசங்கரியில் ஜெயந்தி வசித்து வந்தார். இந்த நிலையில் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகை ஜெயந்தி நேற்று தனது வீட்டில் வைத்து மரணம் அடைந்தார். அவரது வயது 76.
பல்லாரியில் கடந்த 1945-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி பிறந்த ஜெயந்தியின் உண்மையான பெயர் கமலாகுமாரி. ஜெயந்தியின் தந்தை பாலசுப்பிரமணியன் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். தாய் சந்தனலட்சுமி. ஜெயந்திக்கு உடன்பிறந்தது 2 இளைய சகோதரர்கள். பாலசுப்பிரமணியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தியை அழைத்து கொண்டு சந்தனலட்சுமி சென்னை சென்றார். நாட்டுப்புற கலைகளை கற்கும் பயிற்சி மையத்தில் ஜெயந்தி படித்தார்.
ராஜ்குமாருடன் 45 படங்கள்
இந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு கன்னடத்தில் ஜேனு கொண்டா என்ற படத்தின் மூலம் ஜெயந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார். அப்போது தான் கமலாகுமாரி என்ற பெயரை ஜெயந்தி என்று அந்த திரைப்படத்தின் இயக்குனர் மாற்றி இருந்தார். கன்னடத்தில் 160 படங்களில் நடித்து உள்ள ஜெயந்தி, தமிழிலும் சுமார் 50 படங்களில் நடித்து உள்ளார்.
கன்னடத்தில் ராஜ்குமாருடன் இணைந்து 45 படங்களில் நடித்து ஜெயந்தி சாதனை படைத்து இருந்தார். அவரது சிறந்த கலை சேவையை பாராட்டி கர்நாடக அரசு அவருக்கு 7 முறை விருது வழங்கி கவுரவித்து இருந்தது. இதுதவிர 2 முறை பிலிம்பேர் விருதையும், ஒரு முறை பத்மபூஷன் விருதையும் ஜெயந்தி பெற்று உள்ளார். ஜெயந்தியின் மறைவுக்கு எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் திரையுலகினரும் திரண்டு வந்து ஜெயந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிப்பு தெய்வம்
ஜெயந்தி மரணம் குறித்து அவரது மகன் கூறும்போது, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு ஜெயந்தி மெல்ல, மெல்ல உடல் நலம் தேறி வந்தார். நேற்று (நேற்று முன்தினம்) இரவு சாப்பிட்டு விட்டு ஜெயந்தி தூங்க சென்றார். நேற்று காலை அவர் எழுந்திருக்கவில்லை. டாக்டரை அழைத்து பார்த்த போது அவர் தூக்கத்திலேயே உயிரிழந்தது தெரிந்தது.
எனது தாயின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார். மரணம் அடைந்த ஜெயந்தி அவரது ரசிகர்ளால் அபிநய சாரதே (நடிப்பு தெய்வம்) என்று அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story