அங்கோலாவில் சாலையில் மண்சரிவு எதிரொலி; 4 நாட்களாக காத்து நிற்கும் 700 கனரக வாகனங்கள்


அங்கோலாவில் சாலையில் மண்சரிவு எதிரொலி; 4 நாட்களாக காத்து நிற்கும் 700 கனரக வாகனங்கள்
x
தினத்தந்தி 26 July 2021 10:01 PM GMT (Updated: 26 July 2021 10:01 PM GMT)

அங்கோலாவில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் 4 நாட்களாக 700 கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறது. இதனால் டிரைவர், கிளீனர்கள் பரிதவித்து வருகிறார்கள்.

கார்வார்:
  
சாலையில் மண்சரிவு

  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான உத்தரகன்னடாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கார்வார், அங்கோலா, எல்லாப்புரா, சிர்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் கங்காவதி, கத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

  தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அங்கோலா அருகே உப்பள்ளி நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் அதே சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதைத்தொடர்ந்து அங்கோலா-உப்பள்ளி சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

700 வாகனங்கள் அணிவகுப்பு

  இதனால் மங்களூரு, கேரளா, மராட்டியம், ஆந்திரா, குஜராத், மற்றும் உப்பள்ளியில் இருந்து சரக்குகளை கொண்டு வந்த லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. அதாவது ஹட்டிகேரி சுங்கச்சாவடி அருகில் 700-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்துள்ளன.

  அதாவது அங்கோலா அஜ்ஜிகட்டா வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடந்த 4 நாட்களா இதே நிலை நீடித்து வருகிறது. இதில் எரிவாயு டேங்கர்கள், அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களும் சிக்கியுள்ளன.

இன்னும் ஒரு வாரம் ஆகும்

  இதனால் லாரியின் டிரைவர், கிளினீர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். சில லாரி டிரைவர், கிளீனர்கள் தங்களிடம் இருந்த பணமும், உணவுப்பொருளும் காலியாகிவிட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக உணவு சாப்பிட கிடைக்காமல் பட்டினி கிடப்பதாகவும், சேதமடைந்த சாலையை விரைந்து சீர்படுத்த ே வண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

  இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், கனமழையால் அங்கோலா-உப்பள்ளி நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சாலையில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கோலா-உப்பள்ளி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்றனர். இதனால் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story