தற்காலிக சுகாதார பணியாளர்கள் சம்பளம் கேட்டு கலெக்டரிடம் மனு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் சம்பளம் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் சம்பளம் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம் ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று கோரிக்கை மனு அளிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் பலர் வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று மனுக்களை போட்டனர். அதனை அரசு ஊழியர்கள் சரிபார்த்து பெற்றுக்கொண்டனர். ஊட்டி அருகே பிரகாசபுரம் பகுதி மக்கள் கலெக்டருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தண்ணீர் தொட்டி
குடிசை மாற்று வாரியத்தின் கீழ் பிரகாசபுரத்தில் 92 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டது. அதில் 60 வீடுகளில் நாங்கள் வசித்து வருகிறோம். அங்கு குடியிருப்புகளுக்கு 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது.
இருப்பினும் அங்கு தண்ணீர் இல்லை. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றொரு கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றனர். 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. எனவே, அருகே அரசு நிலத்தில் கிணறு அமைத்து, அதிலிருந்து தண்ணீர் தொட்டியில் நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சம்பளம் வேண்டும்
மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் அளித்த மனுவில், நாங்கள் 98 பேர் கேத்தி பேரூராட்சியில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டடோம்.
ஒரு நாள் ஊதியமாக ரூ.600 தருவதாக கூறி பணியில் சேர்த்தனர். தற்போது இதுவரை ஊதியம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகவே, உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மண்சரிவு
இது தவிர நொண்டிமேடு நேரு நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், பலத்த மழையால் பட்டத்துளசி அம்மன் கோவில் தெருவில் தடுப்புச்சுவர் அருகில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.
மேலும் அருகில் உள்ள நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால், அதுவும் சேதம் அடையும் நிலையில் இருக்கிறது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story