சென்னையில் போலீஸ் வேலைக்கான ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தொடங்கியது


சென்னையில் போலீஸ் வேலைக்கான ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 27 July 2021 10:45 AM IST (Updated: 27 July 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீஸ் வேலைக்கான ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தொடங்கியது கொரோனா சான்றிதழுடன் இளைஞர்கள் பங்கேற்பு.

சென்னை,

தமிழக காவல்துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நேற்று முதல் தமிழகம் முழுவதும் 20 மையங்களில் தொடங்கியது.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று காலை முதல் ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இடையில் சனி, ஞாயிறு விடுமுறை. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நடக்கிறது. சென்னை மையத்தில் இந்த உடல் தகுதி தேர்வில் 3,225 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தினமும் 500 பேர் வீதம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்களும் பெண்கள் கலந்து கொள்ளும் ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நடக்கும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி முதல் 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வில் சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு அளத்தல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த தேர்வுக்கு வந்த இளைஞர்கள் கொரோனா சான்றிதழுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். நேற்றைய தேர்வில் சான்றிதழ் சரிபார்த்தல் நடந்தபோது, ஏராளமான என்ஜினீயரிங் மற்றும் முதுகலை பட்டதாரிகளும் கலந்து கொண்டது தெரியவந்தது.

Next Story