வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஏற்றுமதி நிறுவனத்தில் பதுக்கிய பழமையான 3 சிலைகள் பறிமுதல்


வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஏற்றுமதி நிறுவனத்தில் பதுக்கிய பழமையான 3 சிலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 July 2021 5:22 AM GMT (Updated: 27 July 2021 5:22 AM GMT)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்த பழமையான 3 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை கீழ்ப்பாக்கம் ஆரா அமுதன் கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பழமையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் தனிப்படையினர் சென்னை கீழ்ப்பாக்கம் ஆரா அமுதன் கார்டனில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அதிரடியாக சோதனை செய்தனர்.

அங்கு கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழமையான சிலைகள் மற்றும் புராதன பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

3 சிலைகள் பறிமுதல்

இதையடுத்து அங்கு பதுக்கி வைத்து இருந்த ஒரு உலோக அம்மன் சிலை, வராகி கற்சிலை, மற்றொரு அம்மன் கற்சிலை மற்றும் பழமையான ஒரு கிருஷ்ணர் ஓவியம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த சுப்பிரமணியன் (வயது 58) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளி என போலீசார் தெரிவித்தனர்.

இது பற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில்...

கீழ்ப்பாக்கத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியம் ஆகியவை புராதன மற்றும் பழமையானவையாக இருக்கக்கூடும் என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?. எந்த நாட்டிற்கு கடத்தப்பட இருந்தது? என விசாரணை நடத்தி வருகிறோம்.

தென்காசி மாவட்டம் கடையம் ஆழ்வார்குறிச்சி நரசிம்மநாதர் கோவிலில் திருடுபோன அதிகார நந்தி, கங்கால நந்தர் சிலைகளும், அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விக்கரபாண்டியம் விஸ்வநாதர் கோவிலில் திருட்டுபோன நரசிம்மர், கிருஷ்ணா கணேஷ், சம்பந்தர், சோமசுந்தரர், விஷ்ணு ஆகிய 6 சிலைகளும், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் நாரேஸ்வரர் சிவன் கோவிலில் மாயமான திரிபுராந்தகர், திரிபுரசுந்திரி, வீனதாரா, நடராஜர், சுந்தரர், பறவை நாச்சியார் ஆகிய சிலைகளும் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மீட்டு வர நடவடிக்கை

நாகை மாவட்டம் புறையாரில் உள்ள ராஜகோபால் பெருமாள் கோவிலில் ஆனந்த மங்கலத்திற்கு சொந்தமான விலை மதிப்புமிக்க புராதன சிலைகள் 4 திருட்டு போனது. அதில் ராமன், லட்சுமணன், ஸ்ரீமதி சீதா ஆகிய 3 சிலைகளை லண்டனில் இருந்து மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வந்து அவை 42 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அதே கோவிலுக்கு சொந்தமான அனுமன் சிலை சிங்கப்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூரில் உள்ள இந்த புராதன சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்திய தூதரகம் மூலமாக மீண்டும் தமிழகத்துக்கு மீட்டு கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பாராட்டு

கடந்த 2 ஆண்டுகளில் 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டது. இதில் 18 பேர் கைது செய்யப்பட்டு, 40 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது.

சிலை கடத்தல் தொடர்பாக சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கொரோனா காலமாக இருப்பதால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும்படி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான குழுவினருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார்.

Next Story