செங்கல்பட்டில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


செங்கல்பட்டில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 27 July 2021 6:15 AM GMT (Updated: 27 July 2021 6:15 AM GMT)

செங்கல்பட்டில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கலெக்டர் மனைவியும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அனுமந்தபுத்தேரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தின் மனைவி டாக்டர் ரேஷ்மா ராகுல்நாத் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இம்மருத்துவ முகாமில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு தனிவரிசை அமைக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 4 ஆயிரத்து 48 நபர்களுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 2 ஆயிரத்து 228 நபர்களுக்கும் சிறப்பு முகாம்களின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்த மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் பிரியாராஜ், செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி மற்றும் அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

Next Story