வாணியம்பாடியில் கஞ்சா, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்; 4 பேர் கைது


வாணியம்பாடியில்  கஞ்சா, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 1:38 PM GMT (Updated: 27 July 2021 1:38 PM GMT)

வாணியம்பாடியில் கட்டப்பஞ்சாயத்து நடத்திய அலுவலகத்தில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். . அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

வாணியம்பாடி

போலீசார் திடீர் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் டீல் இம்தியாஸ் (வயது 45). சென்னையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் அவருடைய தலைமையில் 20 பேர் கொண்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென வாணியம்பாடி ஜீவாநகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

ஆயுதங்கள் பறிமுதல்

அப்போது அலுவலகத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள், 10 செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த ரஹீம் (30), பசல் (25) சலாவுதீன் (30) மற்றும் கரன்குமார் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் என்பவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

லுவலகத்துக்கு சீல் வைப்பு

விசாரணையில் போலீசார் சோதனை நடத்திய அலுவலகத்தில் கட்ட பஞ்சாயத்து நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது குறித்தும் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின்பேரில், இம்தியாஸ் அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தொடர்ந்து வாணியம்பாடியில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நேரத்தில் தகவல் கொடுத்து தடுத்த மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 10 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
வாணியம்பாடியில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story