லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான புதிய குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் கலெக்டரிடம், 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை


லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான புதிய குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் கலெக்டரிடம், 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2021 7:14 PM IST (Updated: 27 July 2021 7:14 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்களில் குடிநீர் கொண்டு செல்வதற்கான புதிய குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 832 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை 867 கன அடி வீதம் தொடர்ந்து திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 
தமிழகத்தின் 5-வது புலிகள் காப்பகமாக திகழும் மேகமலையில் தேசிய புலிகள் ஆணையத்தின் விதிகளுக்கு எதிராகவும், 2006-ம் ஆண்டு வனச் சட்டங்களுக்கு எதிராகவும் சொகுசு விடுதிகள் கட்டப்படுகிறது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த பகுதியில் கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைவிட வேண்டும்
மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே எடுக்கப்பட்டு வரும் தண்ணீர் அளவை கூட்டி மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். லோயர்கேம்ப்பில் உள்ள போர்பே அணையில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான புதிய திட்டத்தால் தேனி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே, அந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு பதில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அபராதம்
இதுபோல், தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி மாவட்டம் ஒரு காலத்தில் நஞ்சை, புஞ்சை விவசாயம் செழித்து விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கியது. காலப்போக்கில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் அதிக திறன்கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த தண்ணீரை விவசாயிகள் தனியாகவோ, கூட்டாகவோ எடுத்துச் சென்று விவசாயத்தை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை. ஆனால், விதிமீறல் என்று மின்வாரியம், பொதுப்பணித்துறையினர் இந்த குழாய் இணைப்பு மற்றும் மின் இணைப்பை துண்டித்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். இதனால், பயிர்கள் தண்ணீரின்றி காயத் தொடங்கியுள்ளன. எனவே, இந்த நடவடிக்கைகளை கைவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.



Next Story