வைகை அணை நிரம்பியது 7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு தேனி கலெக்டர் திறந்து வைத்தார்
வைகை அணை நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் 7 பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. இதை தேனி கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதில் முழுக்கொள்ளளவாக 69 அடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணை நேற்று முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது.
வைகை அணையில் இருந்து ஏற்கனவே கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
கலெக்டர் திறந்து வைத்தார்
இந்தநிலையில் நேற்று அணை நிரம்பியதை தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக அணையின் மேல்புறத்தில் உள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டது. பின்னர் அணைக்கு வந்த 1,699 கனஅடி தண்ணீர் உபரிநீராக 7 பிரதான மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த மதகுகளை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
வைகை அணையில் திறக்கப்பட்ட உபரிநீரில் 900 கனஅடி பாசனத்திற்காக கால்வாயிலும், 69 கனஅடி தண்ணீர் மதுரை மாநகர குடிநீர் தேவைக்காகவும், மீதமுள்ள 730 கனஅடி தண்ணீர் ஆற்றிலும் செல்கிறது. வைகை ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 30-வது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story