வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் ரூ.26.69 லட்சம் மோசடி வழக்கில் முன்னாள் தலைவர் அதிரடி கைது


வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் ரூ.26.69 லட்சம் மோசடி வழக்கில் முன்னாள் தலைவர் அதிரடி கைது
x
தினத்தந்தி 27 July 2021 2:15 PM GMT (Updated: 27 July 2021 2:15 PM GMT)

வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் ரூ.26 லட்சத்து 69 ஆயிரம் மோசடி செய்த முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார்.


கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்த வருசநாடு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கப்படுகிறது. கடந்த 2015-2016-ம் ஆண்டு இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த ராமர், செயலாளர் பார்த்தசாரதி, காசாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகள் கடன் தள்ளுபடியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 
இந்த புகார் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 2 வருடமாக நடந்த விசாரணைக்கு பிறகு வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடியில் ரூ.26 லட்சத்து 69 ஆயிரம் வரை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
கைது
இதனையடுத்து பார்த்தசாரதி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மோசடி செய்த பணத்தை 3 பேரும் 2 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இந்த நிலையில் பணத்தை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தலைவரான ராமர் மற்றும் பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது தேனி மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் பெரியகுளம் சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் நேற்று அதிகாலை வருசநாட்டில் வைத்து கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராமரை(வயது 53) போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்தசாரதி, ராமகிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story