காட்டுயானை தாக்கி காவலாளி சாவு


காட்டுயானை தாக்கி காவலாளி சாவு
x
காட்டுயானை தாக்கி காவலாளி சாவு
தினத்தந்தி 27 July 2021 3:09 PM GMT (Updated: 27 July 2021 3:09 PM GMT)

காட்டுயானை தாக்கி காவலாளி சாவு

பேரூர்

கோவையை அடுத்த  மதுக்கரை வனச்சரகம், கோவைப்புதூர் அருகே ரேக்கிண்டோ என்கிற தனியாருக்கு சொந்தமான  குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பின் காவலாளியாக மதுக்கரை அறிவொளி நகரைச் சேர்ந்த முத்துசாமி (வயது 62) என்பவர் வேலை செய்து வந்தார். 

இவர் நேற்று அதிகாலை 6 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள காட்டுப்பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு புதர் மறைவில் ஒரு காட்டு யானை நின்றிருந்தது. 

இதனை அவர் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அந்த யானை அதற்குள் ஆவேசம் அடைந்து அவரை நோக்கி ஓடிவந்து தாக்கியது. இதில் அதே இடத்தில் முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை அறிந்த அக்கம், பக்கத்தினர்  மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில், அங்குவனத்துறையினர் விரைந்து வந்து இறந்து கிடந்த முத்துசாமியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யானை தாக்கி அவர் பலியானது தெரியவந்தது.

 இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை பீதியடை செய்துள்ளது.


Next Story