ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக உதவி மையம் திறப்பு
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஊட்டி
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
உதவி மையம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானதை தொடர்ந்து, மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேர தயாராகி வருகின்றனர். இதைதொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நேற்று முன்தினம் முதல் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இங்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், உயிரி-விலங்கியல், வேதியியல் போன்ற இளங்கலை பாடப்பிரிவுகள் மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள் என மொத்தம் 17-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
www.tngasa.in, www.tngasa.org. ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. 2021-2022-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
மாணவர் சேர்க்கை
இங்கு 3 பேர் பணியில் இருப்பதோடு, மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது, விண்ணப்ப கட்டணம் செலுத்துவது போன்ற சந்தேகங்களுக்கு உரிய ஆலோசனைகளை கூறி விளக்கம் அளிக்கின்றனர். தொற்று பரவலை தடுக்க அந்த அறையின் முன்பு கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது.
2 துளைகள் வழியாக பேசுவதை கேட்டு பதில் கூறுகின்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்த படியே செல்போன் அல்லது கணினி மூலம் எளிதில் பதிவேற்றம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள் கல்லூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0423-2443981, 7603845716 என்ற எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story