குடிநீர் திட்ட பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு


குடிநீர் திட்ட பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 27 July 2021 10:53 PM IST (Updated: 27 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4வது குடிநீர் திட்ட பணிகளை க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருப்பூர்
திருப்பூர் மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4வது குடிநீர் திட்ட பணிகளை க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
4-வது குடிநீர் திட்டம்
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மாநகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்கால மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு 4வது குடிநீர் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து தண்ணீர் குழாய் மூலமாக திருப்பூருக்கு கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் ஏற்கனவே உள்ள மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் அம்ரூத் திட்டத்தில் புதிய மேல்நிலை தொட்டிகள் என மொத்தம் 70 மேல்நிலை தொட்டிகள் இணைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள பழைய குடிநீர் தொட்டிகள் 15, அம்ரூத் திட்டத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட 21 தொட்டிகள் என மொத்தம் 36 மேல்நிலை தொட்டிகள் தயாராக உள்ளது. மீதமுள்ள 34 மேல்நிலை தொட்டிகளில் 6 தொட்டிகள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 28 மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
க.செல்வராஜ் எம்‌.எல்.ஏ. ஆய்வு
இந்த நிலையில் திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறும்போது 4வது குடிநீர் திட்டம் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் குடிநீர் உந்து நிலையம் அமைப்பு, குழாய் பதிப்பு பணிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. திருப்பூரில் நடைபெற்று வரும் மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்
2023ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்தி அதற்கு முன்னதாகவே மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது ஒருநாள் விட்டு ஒருநாள் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் பணிகள் நடக்கிறது.
எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story