போலீஸ் பணிக்கு 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு
பாளையங்கோட்டையில் போலீஸ் பணிக்கு உடற்தகுதி தேர்வு நேற்று 2-வது நாளாக நடந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டையில் போலீஸ் பணிக்கு உடற்தகுதி தேர்வு நேற்று 2-வது நாளாக நடந்தது.
போலீஸ் பணி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு துறை, பெண் காவலர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 623 பேருக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்வில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு ஒவ்வொரு நாளும் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
2-வது நாளான நேற்று 500 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக கல்லூரி மைதானத்திற்கு வெளியே ஆவணங்களுடன் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவராக சமூக இடைவெளியில் தங்கள் சான்றிதழ்களை காண்பித்தனர். இதன் பிறகு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது.
கண்காணிப்பு கேமரா
இதைப்போல் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உயரம், மார்பளவு அளக்கப்பட்டது. 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு முககவசம் அணிவிக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர்வு நடந்தது.
போலீஸ் தேர்வு நடைபெற்ற இடத்தில் மாற்று நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
போலீஸ் பணிக்கு ஆள் தேர்வு செய்வதையொட்டி நெல்லையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story