திருச்சியில் ஆன்-லைன் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் அரசு நடுநிலைப்பள்ளி


திருச்சியில்  ஆன்-லைன் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் அரசு நடுநிலைப்பள்ளி
x

திருச்சி பிராட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆன்-லைன் மூலம் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகி

திருச்சி,
திருச்சி பிராட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆன்-லைன் மூலம் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஓராண்டுக்கும் மேலாக பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 12-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த நேரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கடைசித்தேர்வு கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்டதால், சில மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல் போனது. அந்த மாணவர்களுக்கு தனியாக தேர்வும் நடத்தப்பட்டது.

மேலும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இவ்வாறாக பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பிற மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆன்-லைன் வகுப்புகள் 

இப்படியாக கடந்த கல்வியாண்டு கொரோனாவால் கரைந்து போனது. அதுபோல 2021-ம் கல்வியாண்டாவது எந்த அவதியும் இல்லாமல் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் தொற்றின் தாக்கம் தீவிரமானதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. 
பள்ளிகள் மூடப்பட்டாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், ஆன்-லைன் வழிக் கல்விமுறையை மத்திய-மாநில அரசுகள் கொண்டு வந்து, கடந்த ஓராண்டாக அம்முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆன்-லைன் வகுப்புகள் சரியாக நடத்தப்பட்டாலும், அரசு பள்ளிகளில் அத்தி பூத்தாற்போலவே ஆன்-லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. 
அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி
இதில் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் தனியாருக்கு இணையாக ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்படாத நிலையில், திருச்சி அருகே உள்ள பிராட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி ஆன்-லைன் மூலம் போதிக்கப்பட்டு வருகிறது. 
கல்வி டி.வி.யை பார்ப்பதை விட, அப்பள்ளி நிர்வாகம் மாணவர்களை ஒன்றிணைத்து வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி உள்ளது. அதில் முதல் பேட்ஜ், 2-வது பேட்ஜ் என பிரித்து 20 பேர் வரை ஆன்-லைன் வகுப்புகளுக்கு கூகுள் மீட் மூலம் ஸ்மார்ட்போன் வசதியுடைய மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி தினமும் போதிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் ஆன்-லைன் வகுப்பு முழுவதும் ஆங்கிலத்தில் பேசும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நிலைதான் பள்ளிகளிலும் தொடர்வதகாகவும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் தெரிவித்தார். 
ஆங்கில வழிக்கல்வி குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கும் பயிற்சி
எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இ-கேம்பஸ் மீடியம் என்று உருவாக்கப்பட்டு ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 2019-20-ம் கல்வி ஆண்டில் 250 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்திருந்தனர். தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 800 ஆக உள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும். அதற்காக 4 ஸ்மார்ட் வகுப்புகள், 10 கணினிகள், ஸ்மார்ட் போர்டு, ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பு உண்டு. பள்ளி வேலை நேரத்தில் மதியம் பயிற்சி அளிக்கப்படும். கூட்டுபிரார்த்தனை கூட ஆங்கிலத்தில்தான் நடக்கும். வியாழக்கிழமை தோறும் மாலை 4.10 மணி முதல் 5.10 மணிவரை ஆசிரியர்களுக்கு தனியாக ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
தற்போது கொரோனா காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 60 சதவீத பெற்றோர் தினக்கூலிக்கு சென்று விடுகிறார்கள். அவர்கள் ஸ்மார்ட் போன்களை கையில் எடுத்து சென்று விடுவதால் வீட்டில் இருக்கும் மாணவர்களால் பங்கேற்க முடியாது. எனவே, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் ஆங்கிலம் கற்பித்து வருகிறோம். எல்.கே.ஜி. மாணவர்களுக்கு தனியாக வீடியோ அனுப்பி விடுவோம். இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் நடக்கும். அவர்களுக்கு வாட்ஸ்-அப் குரூப்பில் கால அட்டவணை போடப்பட்டு விடுகிறது. பின்னர், அந்தந்த வேளையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. ஆன்-லைன் மூலமாகவே அவை திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. புரியாத வார்த்தைகளுக்கு மட்டும் தமிழில் விளக்கம் அளித்து வருகிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story