பெங்களூருவில் மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து கொலை


பெங்களூருவில் மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 28 July 2021 1:56 AM IST (Updated: 28 July 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

மருத்துவ மாணவர் கொலை

  பெங்களூரு பி.சென்னசந்திரா பகுதியை சேர்ந்தவர் சையத் உமைத் அகமது. இவர், உப்பள்ளியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். அங்கேயே விடுதியில் தங்கி இருந்து சையத் படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பக்ரீத் கொண்டாடுவதற்காக விடுமுறையில் உப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு சையத் வந்திருந்தார்.

  தன்னுடைய குடும்பத்தினருடன் பக்ரீத்தை கொண்டாடிவிட்டு கடந்த 24-ந் தேதி இரவு கல்லூரிக்கு செல்வதற்காக உப்பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சையத் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் நேற்று முன்தினம் ராமமூா்த்திநகர்அருகே பி.சென்னசந்திரா பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சையத் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காரணம் என்ன?

  இதுபற்றி அறிந்ததும் ராமமூர்த்திநகர் போலீசார் மற்றும் பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து சையத் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரது கழுத்தை அறுத்து மர்மநபர்கள் கொலை செய்திருந்தது தெரியவந்தது. மேலும் சையத் அரை நிர்வாணமாக இருந்ததும் தெரிந்தது. அத்துடன் கடந்த 24-ந் தேதியே உப்பள்ளிக்கு செல்வதாக கூறிய சையத், 2 நாட்களாக எங்கு சென்றிருந்தார்? என்பது மர்மமாக உள்ளது. மேலும் அவர் அரை நிர்வாணமாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

  இதனால் சையத்தை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. சையத்தின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதுபோல், பி.சென்னசந்திரா பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story