மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்


மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 28 July 2021 1:58 AM IST (Updated: 28 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த கோனேரிபாளையம் ஊராட்சி அருகே மலைப்பாதையில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில், அப்பகுதியில் வசிக்கும் கல் உடைக்கும் தொழிலாளர்களால் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து ஆடி மாத சிறப்பு பூஜையையொட்டி முதலாம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பெண்கள், சிறுமிகள் செவ்வாடை அணிந்து, வேப்பிலையை கையில் ஏந்தி கோனேரி ஆற்றில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பருவமழை தவறாமல் பெய்து தன தானியம் பெருகிட வேண்டி, கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவிலின் திருப்பணிக்குழு தலைவர் அம்மன் முத்தையா, விஜயா தலைமை தாங்கினர். இதில் கோவில் பொறுப்பாளர்கள் மருதமுத்து, தேவராஜ், முருகேசன் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Next Story