சேலம் மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா: 3½ மாதங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழ் குறைந்தது
சேலம் மாவட்டத்தில் 3½ மாதங்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது. அதாவது 98 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்
100-க்கும் கீழ் குறைந்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி கொரோனாவுக்கு 90 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து கொண்டே சென்று ஆயிரத்தையும் தாண்டியது. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 3½ மாதங்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 32 பேரும், சேலம் ஒன்றிய பகுதியில் 36 பேரும், ஆத்தூர் பகுதியில் 20 பேரும், நகராட்சி பகுதியில் 3 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
147 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 93 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 147 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து 1,400 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்திரியில் பலியானார். இவர் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,540 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story