சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடக்கம்


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 27 July 2021 8:47 PM GMT (Updated: 27 July 2021 8:47 PM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

சேலம்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் தாக்கம் தொடங்கிய போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி போதிய அளவு இல்லாமல் இருந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 1,600 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வகையில், ஏற்கனவே ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று இரும்பாலை வளாகத்தில் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தி மையம்
மேலும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
கொரோனா வைரசின் 2-வது அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் தற்போது தொற்று பாதித்தவர்கள் மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கொரோனா வைரசின் 3-ம் அலை வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர். 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 
ஆயிரம் லிட்டர்
அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் 2 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பாட்டிற்கு வரும் போது அங்கிருந்து குழாய் மூலம் நேரடியாக நோயாளிகளின் அறைக்கே ஆக்சிஜன் செல்லும். அதன்மூலம் சிரமம் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 
ரூ.1 கோடியே 20 லட்சத்தில் ஒரு நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அளவில் தற்போது மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story