பசவராஜ் பொம்மை வாழ்க்கை குறிப்பு


பசவராஜ் பொம்மை வாழ்க்கை குறிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 2:32 AM IST (Updated: 28 July 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

புதிய முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை வாழ்க்கை குறிப்பு இங்கே காண்போம்.

பெங்களூரு:

எஸ்.ஆர்.பொம்மை

  ஜனதா தளம் கட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.ஆர்.பொம்மை. அவர் கர்நாடக முதல்-மந்திரியாக கடந்த 1988-ம் ஆண்டு பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற ஓராண்டிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்பு இன்றளவும் ஆட்சி கலைப்பு வழக்குகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. மாநிலங்களின் ஆட்சி கலைப்பு, பெரும்பான்மையை நிரூபித்தல் போன்ற விஷயத்தில் அந்த தீர்ப்பில் தெளிவான அம்சங்கள் இடம் பெற்றன. இது எஸ்.ஆர்.பொம்மை வழக்கு என்றே உதாரணமாக சட்ட நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது.

  அத்தகைய பிரபலமான தலைவரின் மகன் தான் பசவராஜ் பொம்மை. அவரும் தனது தந்தையின் பாதையில் பயணித்து அரசியலுக்கு வந்தார். கடந்த 1997 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் 2 முறை கர்நாடக மேல்-சபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதுவரை அவர் ஜனதா தளம் கட்சியில் இருந்தார். அதன் பிறகு 2008-ம் ஆண்டு அவர் ஜனதா தளத்தை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.

சிக்காவி தொகுதி

  அதே ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் பசவராஜ் பொம்மை நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றினார்.

  அதன் பிறகு 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை 2-வது முறையாக வெற்றி பெற்றார். பிறகு எடியூரப்பாவுடன் அவரும், பா.ஜனதாவுக்கு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் மீண்டும் சிக்காவி தொகுதியில் போட்டியிட்டு 3-வது முறையாக வெற்றி பெற்றார்.

நீர் பங்கீட்டு பிரச்சினை

  எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் போலீஸ் மந்திரியாக பதவி ஏற்றார். அதன்பிறகு இலாகா மாற்றம் செய்யப்பட்டபோது, அவருக்கு கூடுதலாக சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை அவர் சட்டம்-போலீஸ் துறை மந்திரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பசவராஜ் பொம்மை எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளர் ஆவார். கடினமான காலங்களில் எடியூரப்பாவுக்கு தோள் கொடுத்து உறுதியாக நின்றவர்.

  நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது காவிரி உள்ளிட்ட நீர் பங்கீட்டு பிரச்சினையில் எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் செயல்பட்டார் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. மேலும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். லிங்காயத் சமூக மக்களின் வாக்கு வங்கியை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் எடியூரப்பாவின் சமூகத்தை சேர்ந்தவருக்கு பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கியுள்ளது. பசவராஜ் பொம்மை மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை. அவர் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம் ஆகும்.

பசவராஜ் பொம்மையின் குடும்பம்

புதிய முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ளார். அவரது மனைவி பெயர் சென்னம்மா. 

62 வயதாகும் அவர் வட கர்நாடகத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனின் பெயர் பரத், மகளின் பெயர் அதிதி. வட கர்நாடகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற குரல் மடாதிபதிகள் மத்தியில் எழுந்தது. மேலும் சில எம்.எல.ஏ.க்களும் அந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.


Next Story