ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 3-ந் தேதி ஊட்டி வருகை
குன்னூர் வெலிங்டன் ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 3-ந் தேதி ஊட்டி வருகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
குன்னூர் வெலிங்டன் ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 3-ந் தேதி ஊட்டி வருகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி ஊட்டி வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகிற 3-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார்.
பின்னர் அவர் ராஜ்பவனில் தங்குகிறார். தொடர்ந்து 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட இருக்கிறார். இதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டிக்கு வருகிறார்.
ஜனாதிபதி ஊட்டிக்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து, ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து ராஜ்பவனுக்கு செல்லும் சாலை நகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
அந்த சாலையில் உள்ள புதர் செடிகளை நகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். சாலையில் படிந்து காணப்படும் மண் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னேற்பாடுகள் தீவிரம்
சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க உள்ளதால், தாவரவியல் பூங்காவில் சுத்தம் செய்யும் பணி, புற்களை அழகாக வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராஜ்பவனில் தூய்மை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் சீரமைக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story