அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் சாவு குழந்தை பெற்ற 3-வது நாளில் பரிதாபம்


அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் சாவு குழந்தை பெற்ற 3-வது நாளில் பரிதாபம்
x
தினத்தந்தி 28 July 2021 9:45 AM IST (Updated: 28 July 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நர்சு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா (26) நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 22-ந்தேதி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அழைத்து சென்றனர். அங்கு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதை தொடர்ந்து வனிதா தனது உறவினர்களுடன் தங்கினார். இந்த நிலையில் பணியில் இருந்த நர்சு மணிமாலா, வனிதாவுக்கு தவறான ஊசி ஒன்றை போட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஊசி செலுத்தி கொண்ட சில மணி நேரத்திலேயே வனிதா மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையறிந்த டாக்டர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வாங்காமல், வனிதாவின் உயிரிழப்புக்கு ஆஸ்பத்திரி டாக்டர்களின் கவன குறைவே காரணம் என குற்றம் சாட்டி டாக்டர் மற்றும் நர்சு மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தினர்.

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், கவனக்குறைவாக செயல்பட்ட நர்சு மணிமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story