கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
கூடுதல் பஸ்நிலையம்
கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3.97 ஏக்கரில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பஸ் நிலையத்தை அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.
சமூக விரோதிகளின் கூடாரமானது
கடந்த 14 ஆண்டுகளாக கூடுதல் பஸ்நிலையம் செயல்படாத காரணத்தினால் பஸ்நிலையத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுவது மட்டுமின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் அதனை சீரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் பஸ் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாரயணன், தாசில்தார் அமுதா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, வடடார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழியபாண்டியன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சீரமைப்பு பணிகள்
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடுதல் பஸ்நிலையத்தினை செயல்படுத்த வேண்டும். நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்கள் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் விரைவில் கூடுதல் பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, சாலை வசதி, வாறுகால் வசதி, கழிப்பிட வசதி, இருசக்கர வாகனம் நிறுத்தும் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் தேவையான சீரமைப்பு பணிகள் செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விரைவில் செயல்படும்
கூடுதல் பஸ் நிலையத்தினை செயல்படுத்துவது தொடர்பாகவும், அண்ணா பஸ்நிலையம், கூடுதல் பஸ்நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. பழைய பஸ்நிலையம் மற்றும் கூடுதல் பஸ்நிலையம் இடையே சர்வீஸ் பஸ்கள் 24 மணி நேரமும் விடப்படும். நீண்ட தூர பஸ்கள், மதுரை, நெல்லை, சிவகாசி, ராஜபாளையம் பஸ்கள் இரண்டு பஸ் நிலையங்களுக்கும் சென்று போவது போன்றும், நீண்ட தூர பஸ்கள் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகர பஸ்கள் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து இயக்குவது போன்று பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கூடுதல் பஸ்நிலையம் புதுப்பொலிவுடன் செயல்பட தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story