கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 5:56 PM IST (Updated: 28 July 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தற்போது இந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அனுமதி வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியை நீட்டித்து கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பாளர்கள் மனு கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றி உள்ள மீளவிட்டான், சாமிநத்தம், ராஜாவின் கோவில், மடத்தூர், தெற்கு சங்கரபேரி, வடக்கு சங்கரபேரி, அய்யனடைப்பு, தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாமிநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். அதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story