பூம்புகார் கடலில் மாயமான சிறுவன் உடல், துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது


பூம்புகார் கடலில் மாயமான சிறுவன் உடல், துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 28 July 2021 6:00 PM IST (Updated: 28 July 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் கடலில் மாயமான சிறுவன் உடல் மீன்பிடி துறைமுகம் அருகில் ஆழமான கருங்கற்கள் பகுதியில் ஒதுங்கியது.

திருவெண்காடு,

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர்-நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் ஆதித்யன் (வயது 16). கடந்த 25-ந் தேதி தனது குடும்பத்தினருடன் பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா வந்து இருந்தார். அப்போது தனது உறவினர்களுடன் கடற்கரை மணலில் விளையாடி கொண்டிருந்தார். 

பின்னர் அவர் கடலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சச அலையில் சிக்கி மாயமானார். இதுகுறித்து பூம்புகார் கடற்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குப்பதிவு செய்து, பூம்புகார் தீயணைப்பு துறையினர், கடற்கரை காவல் நிலைய போலீசார் இணைந்து கடலில் மாயமான சிறுவன் ஆதித்யனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் நேற்று காலை மீன்பிடி துறைமுகம் அருகில் ஆழமான கருங்கற்கள் பகுதியில் ஆதித்தியன் உடல் பிணமாக மிதப்பதாக கடற்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, கருங்கற்கள் இடையில் உடல் சிக்கி இருந்ததால், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு அங்கிருந்து கொண்டு வரப்பட்ட நவீன கருவி மூலம் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story