சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடித்த 8 படகு மீது வழக்கு
சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடித்த 8 படகுகள் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவெண்காடு,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், பழையாறு, தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட 23 மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 17-ந் தேதி சுருக்கு மடி வலை கொண்டு மீன்பிடிக்க அனுமதி கோரி பூம்புகார், சந்திரபாடி, திருமுல்லைவாசல் மற்றும் மடவாமேடு மீனவ கிராமங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தன.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மேற்கண்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரிடம் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட 21 வகையான மீன்வள சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து கடலோர கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு தரங்கம்பாடி முதல் பழையாறு வரை கடலோர அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜினியா தலைமையில் கடலோர பாதுகாப்பு குழுவினர், கடலோர காவல்படை, பூம்புகார், பொறையாறு போலீசார், மீன்வளத் துறையினர் கடல் பகுதியில் படகில் சென்று விடிய விடிய ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன் பிடித்த உரிமம் பெறாத 8 படகுகள் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story