தும்மனட்டி தோட்டக்கலை பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை தீவிரம்


தும்மனட்டி தோட்டக்கலை பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 28 July 2021 4:38 PM GMT (Updated: 28 July 2021 4:38 PM GMT)

தும்மனட்டி தோட்டக்கலை பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி

தும்மனட்டி தோட்டக்கலை பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தோட்டக்கலை பண்ணை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தும்மனட்டியில் தோட்டக்கலை பண்ணை உள்ளது. இந்த பண்ணை 25 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு 5 பசுமை குடில்கள் உள்ளன. இங்கு டர்போ, சூப்பர் ரெட், எரக்டஸ், பைசட் ஆகிய 4 ரகங்களை சேர்ந்த கார்னேசன் நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு ஒரு நாற்று ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் 1 லட்சம் கார்னேசன் செடிகள் வளர்க்கப்பட்டு, அதன் மலர்கள் பறித்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் உற்பத்தியான கார்னேசன் மலர்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை.

இதனால் மலர்கள் பூத்தும் விற்பனை செய்ய முடியாமல் தோட்டக்கலைத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக புதிதாக பசுமை குடில் அமைத்து ஸ்ட்ராபெர்ரி செடிகள் நடவு செய்யப்பட்டன.

 தற்போது அந்த செடிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யும் பழங்கள்  விற்பனை செய்யப்பட்டுகிறது. இதன்மூலம் தோட்டக்கலைக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

இதுகுறித்து தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை மேலாளர் சத்யஸ்ரீ கூறியதாவது:-

ஸ்ட்ராபெர்ரி பழங்கள்

புனேவில் இருந்து ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வாங்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடவு செய்யப்பட்டன. நபிலா, வின்டர் டான் ஆகிய 2 ரகங்களை சேர்ந்த 12 ஆயிரம் ஸ்ட்ராபெர்ரி செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. 

ஸ்ட்ராபெர்ரி பழம் ஒரு கிலோ ரூ.175-க்கு விற்பனை செய்து வருகிறோம். குறிப்பிட்ட இடைவெளியில் 200 கிலோ அறுவடை செய்யப்படுகிறது. இதுவரை 4 டன் பழங்கள் அறுவடை செய்து விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

சொட்டுநீர் பாசனம் மூலம் ஸ்ட்ராபெர்ரி செடிகள் பராமரிக்கப்படுகிறது. அதன்மூலம் செடிக்கு தேவையான உரம், மருந்து கலந்து விடப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலைக்காக பசுமை குடில் அமைக்கப்பட்டு உள்ளது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் குளிர்விப்பதற்காக தண்ணீர் மற்றும் பனிமூட்டம் வரவழைக்க தனி வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story