கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 July 2021 10:19 PM IST (Updated: 28 July 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வரவேற்றார்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண்தேஜஸ்வி பேசியதாவது:-
பதாகைகள் வைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தடையை மீறி விற்பனை செய்து வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 
அந்த வகையில் கடந்த 4 நாட்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடை உரிமையாளர்கள் யாரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மேலும் ஒவ்வொரு கடை உரிமையாளர்களும் தங்கள் கடையின் முன்பு, ‘எங்கள் கடையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதில்லை’ என்ற அறிவிப்பு பதாகைகளை வைக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
மேலும் மாவட்டத்தில் எங்கும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்றாலோ, குடோன்களில் எங்கும் பதுக்கி வைக்கப்பட்டாலோ அது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முதலில் கைது செய்யப்படுவார்கள். 
பிறகு சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும். தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றங்களை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் மெட்ரோ கண்ணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.

Next Story