விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு
உடுமலையில், நடைபயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கை ஏற்று, நேதாஜி விளையாட்டு மைதானம் மீண்டும் திறக்கப்பட்டது.
உடுமலை,
உடுமலையில், நடைபயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கை ஏற்று, நேதாஜி விளையாட்டு மைதானம் மீண்டும் திறக்கப்பட்டது.
நேதாஜி விளையாட்டு மைதானம்
உடுமலை கல்பனா சாலையில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. உடுமலை-தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.
அத்துடன் ஆக்கி, கூடைப்பந்து, இறகுபந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி இந்த நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த ஏப்ரல் மாதம் 26ம்தேதி முதல் மூடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து ஊரடங்கில் அரசு அளித்துள்ள கூடுதல் தளர்வுகளின்படி உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த மாதம் 28ந் தேதி திறக்கப்பட்டது. பலரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் விளையாட்டு மைதானம் பூட்டப்பட்டிருந்தது. அத்துடன் இந்த மைதானத்தை திறந்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த ஆவணசெய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் திறப்பு
இந்த நிலையில் நேற்று காலை நடைபயிற்சியாளர்களும், விளையாட்டு வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர். அங்கு மைதானம் பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் காலை 6.30 மணியளவில், உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் உடனடியாக பள்ளிக்கு வந்தார். அப்போது அவரிடம் நடைபயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக நேதாஜி விளையாட்டு மைதானத்தை திறந்து விடும்படி கோரிக்கை விடுத்தனர். இவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு காலை7.15 மணியளவில் மைதானம் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபயிற்சியாளர்களும், விளையாட்டு வீரர்களும் மகிழ்ச்சியுடன் மைதானத்திற்கு சென்றனர்.
Related Tags :
Next Story