உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது
திருப்பூரில் பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கட்டண பேச்சுவார்த்தை
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பல நிறுவனங்களின் பங்களிப்புடன் தான் ஒரு ஆடை தயாரிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது பவர் டேபிள் நிறுவனங்கள் ஆகும். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பவர் டேபிள் உரிமையாளர்கள், சைமா சங்கத்துடன் போட்ட கட்டண ஒப்பந்தம் முடிந்து, 9 மாதங்கள் ஆகிறது. எனவே சைமா சங்கம் கட்டண உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
இதற்கிடையே ஒப்பந்தம் முடிந்து 9 மாதம் ஆன நிலையில் பவர் டேபிள் நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. எரிபொருட்கள், நூல் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் விரைவாக கட்டண உயர்வு வழங்க வேண்டும், இது தொடர்பான பேச்சுவார்த்தையை சைமா சங்கம் தொடங்க வலியுறுத்தி நேற்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கவில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். பேச்சுவார்த்தை தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என பவர் டேபிள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சைமா சங்கம் விரைவாக இந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காண வேண்டும் எனவும், பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். முதல் நாளான நேற்று மட்டும் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story