தொல்லியல் துறையினர் ஆய்வு
தென்மண்டல கோவில்களை ஆவணப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக குமரலிங்கம் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
போடிப்பட்டி
தென்மண்டல கோவில்களை ஆவணப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக குமரலிங்கம் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பழமையான கோவில்கள்
கொங்கு மண்டலத்தில் நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன.அதிலும் ஆண் பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகும் கம்பீரமும் குறையாமல் நிமிர்ந்து நிற்கும் கோவில்கள் ஏராளமாக உள்ளது. அதில் கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் பிரசித்தி பெற்றவையாக உள்ளன.ஆனாலும் ஒருசில பழமையான கோவில்கள் பிரபலமாகாத நிலையில் உள்ளன.மேலும் ஒருசில கோவில்கள் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து வருகிறது. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படும் குமரலிங்கம் கரிவரதராஜப் பெருமாள் கோவில் பராமரிப்பில்லாத நிலையில் உள்ளது.பல ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் இந்த கோவிலை பராமரிக்கவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கல்வெட்டுகள்
இந்தநிலையில் தென்மண்டல கோவில்களை ஆவணப்படுத்தும் திட்டத்தில் பழமையான கோவில்களை ஆய்வு செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி முதன்மை தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, இந்துசமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் பவானி, திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் பழமையான, சிறப்பு வாய்ந்த தென்மண்டல கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் கடத்தூர், கணியூர், குமரலிங்கம், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்தனர்.
மேலும் குமரலிங்கம் வரதராஜப் பெருமாள் கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மண்ணின் மேற்பரப்பிலும் மண்ணுக்கு உள்ளேயும் இருக்கக் கூடிய கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை நுண்மையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வின்போது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை ஜி வி ஜி மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் கற்பகவல்லி, பாரதியார் பெண்கள் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ துணைத் தலைவர் ராஜ சுந்தரம் ஆகியோர் உடுமலை வரலாறு, தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் ஆகிய நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story