விவசாயியிடம் ரூ 22700 லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய அதிகாரி கைது
உளுந்தூர்பேட்டை அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ 22700 லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலைய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
நெல் கொள்முதல் நிலையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர் தனது நிலத்தில் விளைந்த 600 நெல் மூட்டைகளை, விற்பனை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்தார்.
ரூ.22,700 லஞ்சம்
அப்போது அங்கிருந்த நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் குணசேகரன், நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு ஏழுமலையிடம் ரூ.22 ஆயிரத்து 700 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பணத்துடன் வருவதாக கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஏழுமலை, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்சம் கேட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ், ரமேஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கையும், களவுமாக...
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ஏழுமலை, நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளர் குணசேகரனிடம் ரசாயனம் தடவிய ரூ.22 ஆயிரத்து 700-ஐ கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாா், குணசேகரனை கையும் களவுமாக பிடித்து விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.
நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயியிடம் ரூ.22 ஆயிரத்து 700 லஞ்சம் வாங்கிய நெல்கொள்முதல் நிலைய பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநாவலூா் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story