தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்த வில்லை


தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்த வில்லை
x
தினத்தந்தி 28 July 2021 11:33 PM IST (Updated: 28 July 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்த வில்லை

கோவை

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்த வில்லை என்று கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க.  ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து கையில் பதாகை ஏந்திய கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது


பல்வேறு திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால் எதையும் செயல்படுத்த வில்லை. 

நீட்தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்பது போன்ற எதையும் தி.மு.க அரசு நிறைவேற்ற வில்லை. 

எதை பற்றியும் கவலைப்படாத அரசாக இந்த அரசு இருக்கிறது. கொரோனா தடுப்பிலும் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை.

உயிரிழப்பு அதிகரிப்பு

தி.மு.க. அரசு வந்தபின்னர் ஒவ்வொரு ஊரிலும் 50 முதல் 60 பேர் கொரோனாவால் இறந்திருக்கின்றனர். 

டெல்லியில் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.முக ஒருங்கிணைப்பாளரும் கோரிக்கை விடுத்ததனர். அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்கு போடுவது, காவல் துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடுகிறது.

காவல்துறை மிரட்டலுக்கு அ.தி.மு.க.வினர் பயப்பட மாட்டோம். நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்து உள்ளது. இந்த அரசு கையாலாகாத அரசாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

பொய் வழக்கு கூடாது

இதன் பின்னர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது

கொரோனா உயிரிழப்பை இந்த அரசு குறைத்து காட்டுகிறது.

 மோசமாக இருந்த ஊரக சாலைகளை புதுப்பிக்க அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து இருப்பதை கண்டிக்கிறேன். போலீசார் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். 

அ.தி.மு.க. தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து கோவை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். 

Next Story