நிலவு, சூரியன் பொறித்த வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகளை ஆவணப்படுத்தும் பணி


நிலவு, சூரியன் பொறித்த வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகளை ஆவணப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 28 July 2021 6:15 PM GMT (Updated: 28 July 2021 6:15 PM GMT)

கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நிலவு, சூரியன் பொறித்த வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது

திருப்புவனம்
கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நிலவு, சூரியன் பொறித்த வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
உறை கிணறுகள்
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகின்றது. இதனுடன் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் பாசி மணிகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், சுடுமண் கிண்ணங்கள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுடுமண்ணால் ஆன மூன்று அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. பின்பு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கூடுதலாக இரண்டு அடுக்கு உறைகள் கண்டறியப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு மேலும் ஒரு அடுக்கு உறை கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் ஆறு அடுக்குகளுடன் சுடுமண் உறை கிணறு காணப்படுகிறது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் போது இன்னும் கூடுதலாக உறைகிணறுகள் கிடைக்கும் எனவும் தெரிய வருகிறது. 
மேலும் கீழடியில் சுடுமண் விளையாட்டு பொருள், எலும்பு புள்ளிகள், சுடுமண் ஆட்ட காய்கள், சுடுமண்ணால் ஆன முத்திரைகள், பெண்கள் அணியும் காதணிகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதை வரைபடம் மூலம் ஆவணப்படுத்துதல் பணியும் நடைபெற்று வருகிறது. இதுதவிர வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் சதுரமாக உள்ளது. இருபுறமும் நிலவு, சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆவணப்படுத்தல்
இதேபோல் கொந்தகையில் மனித முழு உருவ எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழிகள் நான்கு ஆய்வு செய்ததில் உள்ளே இருந்து மனித மண்டை ஓடு, விலா எலும்பு, தசை எலும்பு, கை கால் எலும்பு, சிறிய மண் கிண்ணம், இரும்பினால் ஆன வாள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் டிரோன் கேமரா மூலமும் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
அகரத்தில் சிறிய பெரிய நத்தை ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பெரிய பானைகள், சுடுமண் உறைகிணறு, செங்கல் சுவர் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மணலூரில் மண்பாண்ட ஓடுகள் மற்றும் சில பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Next Story