காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் மழை


காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் மழை
x
தினத்தந்தி 28 July 2021 6:15 PM GMT (Updated: 28 July 2021 6:15 PM GMT)

காரைக்குடி, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காரைக்குடி
காரைக்குடி, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பரவலான மழை
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை வராமல் பொதுமக்களை ஏமாற்றி வந்தது. இந்நிலையில் நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை வருமா என்று காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காரைக்குடி பகுதியில் நேற்று மாலை  5.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 40நிமிடங்கள் வரை நீடித்து பெய்தது. 
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காரைக்குடி கழனிவாசல் பகுதி, செஞ்சை பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வரும் வேளையில் நேற்று பெய்த மழையினால் இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குளுமையான நிலை
தேவகோட்டை பகுதியில் நேற்று மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் வரை பெய்த இந்த மழையினால் நகர் பகுதி முழுவதும் குளிர்ச்சியான நிலை நீடித்தது. மேலும் திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை பரவலான மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
இதேபோல் சிங்கம்புணரி பகுதியில் நேற்று மாலை வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து குளுமையான நிலை நீடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story