ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படம் செய்வதை கண்காணிப்பு குழுவினர் தடுக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேச்சு
ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படம் செய்வதை கண்காணிப்பு குழுவினர் தடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
சேலம்
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் மரவள்ளி கிழங்கு மாவு ஆலைகளில் மக்காச்சோளமாவு கலப்படத்தை தடுக்கவும், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. சேலம் சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் பத்மஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசும் போது கூறியதாவது:-
உணவு பாதுகாப்பு தரச்சட்ட விதிகளின்படி ஜவ்வரிசி ஆலைகளில் எவ்வித கலப்படமின்றி ஜவ்வரிசி உற்பத்தி செய்வதையும், ஜவ்வரிசி ஆலைகளில் ரசாயண கலப்படங்கள் ஏதேனும் செய்யப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க வேண்டும். ஜவ்வரிசி ஆலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் மற்றும் வாயுக்கள் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களை பாதிப்படைய செய்யாமல் தடுக்க முறையான கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும்.
வரி ஏய்ப்பு
உற்பத்தியாளர்களில் சிலர் ஜவ்வரிசி மற்றும் மாவு பொருட்களை வரி ஏய்ப்பு செய்து வெளி சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அரசிற்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தை அடையச் செய்து, வரி ஏய்ப்பு மூலம் அரசிற்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விலை மலிவாக கிடைக்கும் மக்காச்சோள மாவை மரவள்ளி கிழங்கு மாவுடன் சேர்த்து ஜவ்வரிசி உற்பத்தி செய்து, சந்தை விலையை விட மிக குறைவான விலையில் சில உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசியை வெளி சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்வோர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. மேலும், சந்தையில் ஜவ்வரிசி விலை குறைவதால், அதன் தொடர்ச்சியாக மரவள்ளி கிழங்கின் கொள்முதல் விலையும் பெருமளவு குறைந்து மரவள்ளி பயிரிடும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தரமான ஜவ்வரிசி
எனவே, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவினர் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க ரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களிடையே தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்வது தொடர்பான விழிப்புணர்வை கண்காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்), சரண்யா (ஆத்தூர்), வேடியப்பன் (சங்ககிரி), மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், மாவட்ட சேலம் சேகோசர்வ் பொது மேலாளர் ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story