புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா வாழ்த்து
புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
எடியூரப்பா குரல்
புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பான எதிர்க்கட்சியாக உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இதே போன்ற ஒத்துழைப்பை உங்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறேன். மத்திய அரசால் கர்நாடகத்திற்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்து எடியூரப்பா குரல் கொடுக்கவே இல்லை. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.
கர்நாடகத்திற்கு உதவி
ஆனால் நீங்கள் மத்திய அரசிடம் கர்நாடகத்தின் உரிமைகள் குறித்து தைரியமாக பேச வேண்டும். நீங்கள் அவ்வாறு பேசுவீர்கள் என்று நம்புகிறேன். வெள்ள நிவாரணம், ஜி.எஸ்.டி. இழப்பீடு, வரி பங்கீடு, கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு உதவி செய்வது போன்ற விஷயங்களில் கர்நாடகத்திற்கு உதவி செய்வதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டுள்ளது.
கர்நாடகத்திற்கு அநீதி ஏற்படும்போது அதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, டெல்லிக்கு அனைத்துக்கட்சி குழுவை அழைத்து செல்லும் மரபு இங்கு உள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இத்தகைய ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுவது நின்றுவிட்டது. நீங்கள் அந்த மரபை மீண்டும் தொடங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மக்கள் பிரச்சினைகள்
முதல்-மந்திரி பதவி கட்சிக்கு சொந்தமானது அல்ல. அது மாநிலத்திற்கு சம்பந்தப்பட்டது. எதிர்க்கட்சியாக கொள்கை ரீதியாக நாம் மோதினாலும், வளர்ச்சி என்று வரும்போது நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்ற வேண்டும் என்று வயதில், அனுபவத்தில் மூத்தவராக நான் இந்த ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறேன்.
முந்தைய முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கடிதங்களை எழுதினேன். ஆனால் அதற்கு பதிலளிக்கும் மனநிலையை அவர் வெளிப்படுத்தவில்லை. உங்கள் காலத்திலாவது தகவல் பரிமாற்றம் சுமுகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story