ஜனதா பரிவாரில் இருந்து வந்தவர், பசவராஜ் பொம்மை
புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஜனதா பரிவாரில் இருந்து வந்தவர் ஆவார். அவரை பற்றிய கட்டுரையை கீழே காண்போம்.
பெங்களூரு:
முதல்-மந்திரிகள் நியமனம்
நாட்டில் மோடி பிரதமராக வந்த பிறகு பா.ஜனதாவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இதுவரை மேற்கொண்ட முதல்-மந்திரி நியமனம் பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கிறது. யாருமே எதிர்பாராத தலைவர்களை முதல்-மந்திரிகளாக நியமனம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
அதாவது கடந்த முறை உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்ற பிறகு, யார் முதல்-மந்திரி என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. அத்தகைய நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் யோகிஆதித்யநாத் முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார். அதே போல் திரிபுரா, மராட்டியம், உத்தரகாண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியின் முதல்-மந்திரி நியமனம் ஆச்சரியம் அளிப்பதாகவே இருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லக்கூடிய சங்பரிவார் அமைப்பில் இருந்து வந்தவர்களாக தான் உள்ளனர். பா.ஜனதா தற்போது ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்களை தான் முக்கிய பதவிகளில் அமர்த்துகிறது என்ற பேச்சும் உள்ளது.
எடியூரப்பா ராஜினாமா
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவும் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்க அமைப்புகளில் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்து உயர் பதவியை அடைந்தார். பா.ஜனதா கொள்கைப்படி 75 வயதை தாண்டியர்களுக்கு பதவி வழங்குவது இல்லை. ஆனால் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு மேலும் 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியது.
அதன்படி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை கடந்த 26-ந் தேதி ராஜினாமா செய்தார். அடுத்த முதல்-மந்திரி யாரை பா.ஜனதா மேலிடம் நியமனம் செய்யும் என்ற கேள்வி எழுந்தது. பிற மாநிலங்களில் நடந்ததை போல் கர்நாடகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்களில் ஒரு தலைவரை தான் முதல்-மந்திரியாக பா.ஜனதா மேலிடம் நியமனம் செய்யும் என்ற பேச்சு எழுந்தது.
பி.எல்.சந்தோஷ்-பிரகலாத்ஜோஷி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்த பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, சபாநாயகர் காகேரி உள்ளிட்டவர்களில் ஒருவர் தான் முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. பசவராஜ் பொம்மை, அரவிந்த் பெல்லத் போன்றோரின் பெயர்கள் அடிபட்டாலும், பி.எல்.சந்தோஷ், பிரகலாத்ஜோஷி ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு வழங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளரான பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். இந்த முடிவு அரசியல் அரங்கில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பசவராஜ் பொம்மை அடிப்படையில் ஜனதா பரிவார் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை, ஜனதா தளம் கட்சியில் தேசிய அளவில் பதவி வகித்தவர். முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பணியாற்றியவர். பசவராஜ் பொம்மையும் அவரது தந்தை வழியிலேயே ஜனதா தளம் கட்சியில் மாநில அளவில் பொறுப்பு வகித்தார். அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்ட நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு அவர் ஜனதா பரிவாரில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.
எடியூரப்பா கை காட்டுபவர்
ஜனதா பரிவாரை சேர்ந்த ஒருவருக்கு பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பசவராஜ் பொம்மையை தேர்ந்து எடுத்ததின் பின்னணியில் சில முக்கியமான காரணங்கள், சாதி கணக்கு போன்றவை உள்ளது. அதாவது, கர்நாடகத்தில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமுதாயத்தினர் 17 சதவீதம் பேர் உள்ளனர். அந்த சமுதாய மக்கள், பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் லிங்காயத் சமூகம் பா.ஜனதாவின் மிக முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளது.
இன்னொருபுறம் எடியூரப்பாவை பகைத்துக் கொண்டால் அது அடுத்து வரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா மேலிடம் கருதி இருக்கக்கூடும். எடியூரப்பா கை காட்டுபவர் மற்றும் அதே சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழஙகினால், லிங்காயத் சமூக வாக்கு வங்கியில் சேதாரம் இருக்காது என்று கருதி பா.ஜனதா மேலிடம் பசவராஜ் பொம்மையை அரியணையில் அமர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஊழல் புகார் எழாதது...
அது மட்டுமின்றி பசவராஜ் பொம்மையிடம் தலைமை பண்புக்கான குணங்கள் இருப்பது, 7 ஆண்டுகள் மந்திரியாக செயல்பட்ட அனுபவம், காவிரி உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை சரியாக கையாண்டது, இந்த 7 ஆண்டு காலத்தில் அவர் மீது இதுவரை ஒரு ஊழல் புகார் கூட எழாதது, எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காதது, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது, உள்கட்சி தலைவர்களிடம் நல்ல தொடர்பு வைத்திருப்பது, எதிர்க்கட்சி தலைவர்களையும் மதிக்கும் பண்பு போன்றவையும் அவர் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மடாதிபதிகளின் கோபம் தணியும்
முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கக்கூடாது என்று லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அனைத்து மடாதிபதிகளும் பா.ஜனதா மேலிடத்திற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். அவரை நீக்கினால் பா.ஜனதா அழிந்துவிடும் என்று அவர்கள் கூறினர்.
மடாதிபதிகளின் மிரட்டலை பொருட்படுத்தாமல் திட்டமிட்டப்படி பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை நீக்கியது. ஆனால் லிங்காயத் சமூகத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுவதை தடுக்க அதே சமூகத்தை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மடாதிபதிகளின் கோபம் தணிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story