சசிகலாவை கட்சியில் இருந்து பொதுக்குழுதான் நீக்கியது: அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது


சசிகலாவை கட்சியில் இருந்து பொதுக்குழுதான் நீக்கியது: அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது
x
தினத்தந்தி 29 July 2021 7:54 AM IST (Updated: 29 July 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவை அ.தி.மு.க. பொதுக்குழு தான் கட்சியில் இருந்து நீக்கியது என்றும், அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் போடியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டம் போடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின் போது, 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறினர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் தரப்பட்டன. மக்கள் அதை நம்பி வாக்களித்தனர். அ.தி.மு.க.வை விட வெறும் 3 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது.

கொரோனா மரணங்கள் மறைப்பு

ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 3 மாத காலத்தில் முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் தி.மு.க. அரசு பின்வாங்கும் சூழல்தான் இருக்கிறது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது எல்லாம் மக்கள் விரோத அரசாக தான் நடக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது ‘நீட்' தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினோம். மேகதாது அணை பிரச்சினையில் எந்த நிலையிலும் அதை அனுமதிக்காத சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்கிற எங்களுடைய உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்ச்சிகளையும் கூறினோம்.

கைப்பற்ற முடியாது

தமிழக அரசின் அனுமதியை பெறாமல் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என்கிற நிலை இருக்கிறபோது கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று பிரதமரிடமும், உள்துறை மந்திரியிடமும் தெளிவாக விளக்கி கூறி இருக்கிறோம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற ஜனநாயக முறைப்படி, கடந்த 4½ ஆண்டுகளாக நாங்கள் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறோம். அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒரு தனிப்பட்ட குடும்பமோ, தனி நபரோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த நிலை தொடரும்.

சசிகலாவை அ.தி.மு.க. பொதுக்குழுதான் நீக்கியது. யார் எந்த முயற்சியை எடுத்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது.

விசாரணை ஆணையத்தில் ஆஜர்

நான் நிதி அமைச்சராக இருந்த காலத்தில், மத்திய அரசு சொன்ன சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் கடன் வாங்கப்பட்டுள்ளது. வாங்கிய கடன் மூலதன செலவுக்கு செலவிடப்பட்டுள்ளது. ஆடம்பர செலவு, வீண் செலவுகளுக்கு செலவிடப்படவில்லை.

சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க நான் தயார். ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கும் போது முதல் ஆளாக நான் ஆஜராகி பதில் சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story