ஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டகை அமைத்து சாலை மறியல்


ஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டகை அமைத்து சாலை மறியல்
x
தினத்தந்தி 29 July 2021 11:41 AM IST (Updated: 29 July 2021 11:41 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டை அருகே ஆதிதிராவிடர்களுக்கு வீடுகட்ட நிலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ராஜா நகரம் மோட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மேற்கு பகுதியிலுள்ள காலனியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு கிழக்கு ராஜா நகரம் கிராமம் அருகே சில ஆண்டுகளுக்கு முன் இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி ஆதிதிராவிட மக்கள் ஏற்கனவே மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது இதுகுறித்து உரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்து அவர் புறப்பட்டுச்சென்ற பிறகு ஆதிதிராவிட மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

சாலை மறியல்

இதை அறிந்த ராஜா நகரம் மோட்டூர் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் நீண்டகாலமாக ஆதிதிராவிடர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைக்கண்டித்து நேற்று காலை அவர்கள் பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் கொட்டகை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஆதிதிராவிட மக்களுக்கு அந்த இடத்தை வீடு கட்ட வழங்கக்கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் கிடைத்ததும் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆதிதிராவிடர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்கினால் இரு சமுதாயத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் எதிர்ப்பு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கிராம மக்களிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story